என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Sunday, 10 August 2025

அறுதி விடியல் - சிறுகதை

 சொல்வனம் 348வது இதழில், எனது சிறுகதை 'அறுதி விடியல்' சிறுகதை வெளியாகியிருக்கிறது. எனது சிறுகதையைத் தெரிவு செய்த சொல்வனம் இதழ் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகள்.


சிறுகதையை வாசிக்க, பின்வரும் சுட்டியைச் சொடுக்கவும்:

https://solvanam.com/2025/08/10/%e0%ae%85%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/





Tuesday, 29 July 2025

ஆணவக்கொலை

ஆணவக்கொலை

********************** 

சில பேரெல்லாம் பாப்பதற்கு நவ நாகரீகமாக உடை அணிந்து, சிந்தனைச் செல்வர்கள் போல் தோற்றமளிப்பார்கள். நெருங்கிப் பார்த்தால் தான் தெரியும், அது ஒரு சாக்கடை என்பது.

 பலரெல்லாம் ஒரு குடும்பமாகவே மிகவும் Toxicகாகத்தான் இருப்பார்கள். நாம் நெருங்கி விடக்கூடாது. சூதனமாக ஒதுங்கிச் சென்று விடவேண்டும். 

"சாதியாவது மண்ணாவது" என்று சாதிவெறியர்கள் கூட, பேசக் கற்றுக்கொண்டுவிடுவது, சமூகப் புழக்கத்திற்கு மட்டுமே. ஒரு நடிகன் வந்து "என்னை வாழ வைக்கும் தெய்வம்" என்று பொதுமேடையில் மைக் முன் பேசினால், அது ஜோடனை என்று  நாம் தான் புரிந்துகொள்ள வேண்டும். வேற்று மொழிக்காரர்கள் உள்ளூர் வந்து "வந்தாரை வாழ வைக்கும் ஊர்" என்று சொன்னால், அவன்  நம்மூரைப் புகழ்கிறான் என்று அர்த்தமல்ல. தன் புழக்கத்தற்கு, பிழைப்பிற்கு அந்த ஊரைத் தயார் செய்கிறான் என்று அர்த்தம். இதையெல்லாம் யாரும் சொல்லித்தர மாட்டார்கள். சூதனத்தை நாம் தான் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கான காலம் தான் பதின்ம மற்றும் இருபதுகள் வயது. இந்த வயதில் காதல் எல்லாம் பெரும்பாலும் ஏமாற்றத்திற்குத்தான் இட்டுச்செல்லும். 

காதல் ஒரு நல்ல உணர்வு தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், அதை இக்காலகட்டத்தில் உண்மையாகச் செய்வது யார்? காதலன் கொல்லப்பட்ட பிறகு, அவனை யார் என்றே தெரியாது என்று சொல்வதெல்லாம் என்ன ரகமான காதல்? இப்படி இருக்கும் நபர்களுக்காக உயிர் விடுவதெல்லாம் என்ன மடத்தனமான காதல்?

சென்ற மாதங்களில் ஒரு ஐடி நிறுவனத்தில் காதலித்த பெண் வேறு நபருடன் ஹோட்டல் சென்றார் என்ற காரணத்திற்காய் ஒருவர் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். இதெல்லாம் என்ன மடத்தனமான காதல்? என்ன கண்மூடித்தனமான கேனத்தனமான காதல்?  இக்காலத்தில் உண்மைக் காதலுக்கெல்லாம் தகுதியான ஆட்கள் மிகவும் குறைவு.  நாம் தான் அந்தக் காதலர்கள் என்று நாமாக நினைத்துக்கொள்வதெல்லாம் delusionல் வேற லெவல். 

மாதம் இரண்டு லட்சம் ஊதியம் வாங்கும் இடத்திற்கு நகர்ந்த பிறகு, இரண்டு லட்சம் ஒரு மாதத்திற்குப் போதாதா என்ற எண்ணத்தில், வருமானத்திற்குள் வாழ்ந்தால் போதும் என்கிற 'போதுமென்கிற மனமே.....' என்ற எண்ணத்தில், பெண் தேடப்போனால், 'வேலைக்குப் போகாத பெண் வேண்டுமா? என்ன ஒரு ஆணாதிக்கம்?' என்பார்கள். ஒரு ஷோவில் "ஒரு ஸ்டீரியோடைப்பை உடைச்சிட்டு சமூகத்திற்கு பயப்படாம எவன் வரானோ அவன் கம்பீரமான பையன்" என்று ஒரு பெண் சொல்லிக்கொண்டிருந்தார். இன்னொரு ஷோவில், "கணவனைப் பிரிந்த அன்னையர்களை மறுமணம் செய்பவன் தான் உண்மையான ஆண்" என்று இன்னொரு பெண் சொன்னார்.  ஆக, நீங்கள் நீங்களாகவே இருக்க அனுமதிக்காத சமூகம் தான் இது. இதில் எவன் நல்லவன்? எவன் கெட்டவன்? அதைச் சொல்லப்போவது யார்? அவர்களின் யோக்கியதை என்ன? 

நம்மை வேறு யாரோவாக இருக்கச் சொல்லும் சமூகத்திற்காக வளைந்து கொடுத்துக்கொண்டே இருப்பதற்கு,நாம் நாமாக இருந்துவிட்டு போயிடலாம். 

நம்மை நம்பி வயதான பெற்றவர்கள் இருக்கிறார்கள். பதின்ம மற்றும் இருபதுகள் வயதுகளை, சுய முன்னேற்றத்திற்கும், சமூக அங்கீகாரத்திற்கும், மரியாதைக்கும் பொருளாதார முன்னேற்றத்துக்கும், பெற்றவர்களைக் காப்பாற்றவும் பயன்படுத்துங்கள். இதுவும் ஒரு விதத்தில் காதல் தான்.   தன் சுயம் மீதான காதல். இந்த உலகம் 'காதலில் விழவில்லை' என்றால் ஏளனமாகத்தான் பார்க்கும். காதலில் விழுமளவிற்கு இங்கே யார் தகுதியாக இருக்கிறார்கள் என்ற கேள்வியை நாம் தான் எழுப்பிக்கொள்ள வேண்டும். 

தனிப்பட்ட முறையில், என்னைக் கேட்டால், யாருமே தகுதியில்லை என்று எல்லோருமே நினைத்துக்கொண்டு அவரவர் வேலையில் இயங்குவது ஒரு நல்ல strategy என்பேன். இந்த நினைப்பு தவறென்றால் எவரேனும் 'வாழ்ந்து காட்டி' நிரூபித்துக்கொள்ளட்டும். அப்படி 'வாழ்ந்து காட்ட' எவருமே இல்லையென்றால், ரொம்ப நல்லதாகிவிட்டது. அதுதான் அவரவர் வேலையில் ஏற்கனவே இயங்கிக்கொண்டிருக்கிறோமே. சுய முன்னேற்றமாவது மிஞ்சும். 

விழித்துக்கொள்ளுங்கள் நண்பர்களே.



Saturday, 26 July 2025

Radiosynthesis

 Radiosynthesis


Photosynthesis தெரியும். அதென்ன Radiosynthesis?

செர்னோபில் ரியாக்டர் சுவற்றில் பூஞ்சைக் காளான் வளர்வதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.  ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? கதிர்வீச்சு அதிகம் உள்ள இடங்களில் உயிர் வளர்ச்சி சாத்தியமில்லை. ஏனெனில், தொடர் கதிர்வீச்சில் உயிர்களில் பிறழ்வுகள் ஏற்பட்டு, வளர்ச்சி தடைபட்டுவிடுவது தான்.

ஆனால், இந்தப் பூஞ்சைக் காளான், நாளடைவில், கதிர்வீச்சுக்கான எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொண்டிருந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எப்படி? தாவரங்கள் சூரிய ஒளியிலிருந்து உணவைத் தயாரிப்பது போல, இந்தப் பூஞ்சைக் காளானும் கதிர்வீச்சிலிருந்து சக்தியைப் பெறக் கற்றுக்கொண்டுவிட்டது.

எப்படி? நம் உடலில் உள்ள மெலனின் தான். அதே மெலனின் இந்தப் பூஞ்சைக் காளானிடமும் இருக்கிறது. அதிக அளவிலான மெலனினைப் பயன்படுத்தி கதிர்வீச்சை தடுத்து, ஆக்கப்பூர்வமான சக்தியாக மாற்றுகிறது. வினோதம் தான் இல்லையா?



Tuesday, 15 July 2025

சொல்வனம் - ஷார்ட்ஸ்

மற்றுமொரு youtube shorts.

https://www.youtube.com/shorts/C-5Nlp-onlo

சொல்வனம் ஆசிரியர் குழுவுக்கும், சரஸ்வதி தியாகராஜன் Saraswathi Thiagarajan அவர்களுக்கும் எனது நன்றிகள் 🙏🙏🙏




 

Monday, 14 July 2025

ஜப்பான் தமிழ்ச் சங்கம்

ஜப்பான் தமிழ்ச் சங்கத்திலிருந்து யாரேனும் நட்பு வட்டத்தில் இருக்கிறீர்களா?

இந்தப் பரிமாற்றத்தைக் கடக்க நேர்ந்தால், மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்பு கொள்ளவும். ramprasath.ram@gmail.com

Friday, 11 July 2025

தென்றல் இதழில் வெளியான எனது நேர்காணல்

வடஅமெரிக்காவிலிருந்து வெளியாகும் “தென்றல்” இதழில் வெளியான எனது நேர்காணல்..

https://www.tamilonline.com/mobile/article.aspx?aid=15707

தென்றல் ஆசிரியர் குழுவுக்கும்,   மதுரபாரதி அவர்களுக்கும், சரஸ்வதி தியாகராஜன் அவர்களுக்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன் 









Sunday, 6 July 2025

காலங்கடத்தி

காலங்கடத்தி


அப்போது பத்தாவது  முடித்துவிட்டு பதினோராம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். வீட்டிலேயே தண்டால் பஸ்கி எடுத்துக்கொண்டிருந்ததில் போதாமை ஏற்பட்டு ஜிம்முக்குச் செல்லலாம் என்று முடிவானது. 

நூறு ரூபாய் தான் மாதம். அப்பா தரும் பாக்கேட் மணியில் ஜிம். அந்த ஜிம்முக்கு பெரும்பாலும் சைதாப்பேட்டை காய்கறி மார்கெட்டில் வேலை பார்ப்பவர்கள் வருவார்கள். ஜிம் ட்ரெயினர், தமிழ்நாடு ஆணழகன் போட்டியாளர் என்றார்கள். ஜிம் பாலபாடம் அவரிடம் தான். நானும் அண்ணனும் தவறாமல் செல்வோம். பண்ணிரண்டாம் வகுப்பு முடித்து பொறியியல் சேர்ந்திருந்தேன். ட்ரெயினர் என்னை 'எஞ்சினியர்' என்று அழைக்கத்துவங்கியிருந்தார்.

ஜிம்மில் முதலில் கண்டடைவது Discipline தான். அதற்காகவே ஒவ்வொருவரும் ஜிம் செல்ல வேண்டும் என்பது என் பரிந்துரை.   சத்தான உணவு.   நாள் ஒன்றுக்கு 15-17 முட்டை. காலையில் பழைய சோறு, கேழவரகு கஞ்சி. ப்ரோட்டீன் நிறைந்த உணவுகள். சோளம். காய்கறி. உலர் பழங்கள். கோழி இறைச்சி. உடலின் சக்தியை வெளியேற்றும் எந்தப் பழக்கமும் அறவே கூடாது. இப்படி நிறைய சொல்லிக்கொண்டே செல்லலாம்.

அந்த நினைவுகளையெல்லாம் கிளறிவிட்டுவிட்டது Alappuzha Gymkhana  திரைப்படம். திரைப்படத்தின் இறுதியில் சற்று கமர்ஷியலாக்கிவிட்டார்கள் என்றபோதிலும், பெரும்பான்மைக்கு உள்ளூர் ஜிம்,அதற்குச் செல்லும் ஆண்களின் வாழ்வில் நடக்கும்  நிகழ்வுகள் என்று கலவையாகத் தந்திருக்கிறார்கள்.  Naslen Gafoorந் 'ப்ரேமலு'வை ஒரு நூறு முறையாவது பார்த்திருப்பேன். 

சரி, இந்தப்படத்தில் என்னதான் பண்ணி வைத்திருக்கிறான் என்று பார்த்தால், உண்மையாகவே படத்திற்காக உடலளவில் நன்றாகவே உழைத்திருப்பது தெரிகிறது. 

வெறுமனே ஜிம் போனோமா, யார் பலசாலி என்று ஈகோ பார்த்து அடித்துக்கொண்டோமா, ஏரியாவில் கெத்து காட்டுவது என்றெல்லாம் இல்லாமல், இந்த விளையாட்டை வைத்து எப்படி அடுத்த கட்டம் நகர்வது என்று யோசிக்கும் நாயகர்களாகக் காட்டியிருப்பதில் சற்று ஒன்ற முடிந்தது.  நான் ஜிம் செல்லத்துவங்கியபோது, பாடி பில்டிங் துறையில் செல்லலாமா என்றொரு யோசனை இருந்தது. அதற்கேற்றார்போல், உடலில் ஆங்காங்கே cuts வைத்து, arms, chest என்று மெருகேறத்துவங்கியபோது, நிஜமாகவே அந்தத் துறையில் scope இருப்பதாகப் பட்டு, நாள் ஒன்றுக்கு பதினைந்து மணி நேரம் செலவிடக் கூட தயாராக இருந்தேன். மாநில அளவில் செயலாற்றி Sports quotaல் சீட் என்று யோசிப்பதெல்லாம் கச்சிதமாக உண்மை தான். அப்போது, அந்த வயதில் அப்படித்தான் தோன்றும். ஆலோசனையும் அந்த ரீதியில் தான் கிடைக்கப்பெறும். பிறபாடு பொறியியல், இறுதி ஆண்டு, அப்படி இப்படி என்று அதிலிருந்து படிப்படியாக ஃபோகஸ் மாறி கணிணித்துறைக்குள் வந்து நின்றது. 

விதி. வேறென்ன சொல்ல? 

ஆக, படத்தில் பல இடங்களை பால்யத்தோடு பொறுத்திப்பார்க்க முடிந்தது. இத்தனை வருடங்களில், சில விடயங்கள் மாறவே இல்லை என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது. 

எதற்காக இல்லாவிட்டாலும், ஜிம், நமக்குள் ஏற்றும் அந்த Disciplineக்காகவே, பதின் பருவத்தில் உள்ளவர்கள் ஜிம் செல்ல வேண்டும் என்பது என் ஆலோசனை. எல்லோருக்கும் வாழ்க்கை எதிர்பாப்புக்கேற்றார்போல் அமையாது. பலருக்கு, பல சமயங்களில், வாழ்க்கையில் எந்தக் கன்ட்ரோலும் இருக்காது. அதுபாட்டுக்கு அவசர அவசரமாக அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து கொண்டே இருக்கும். அதன் போக்கில் போனால், வேறொரு இடத்துக்கு நம்மைக் கடத்திக்கொண்டு போய் விட்டுவிடும். அதைத் தவிர்க்க வேண்டுமானால், ஒரு 'காலங்கடத்தி' வேண்டும். அது, நமக்குள் ஆன்ம பலம் தருவதாகவும் இருக்க வேண்டும். தன்னம்பிக்கை உயர்த்துவதாகவும் இருக்கவேண்டும். எதிர்காலத்தை எதிர்கொள்ள வலு கூட்டுவதாகவும் இருக்க வேண்டும்.  இதற்கெல்லாம், ஜிம் ஒரு கச்சிதமாக 'காலங்கடத்தி' என்பேன். 

ஜிம் பழகுங்கள். இளமையிலேயே ஜிம் பழகுவது சாலச்சிறப்பு. எல்லோரும் பழகுவது வெகு உத்தமம். ஜிம் பழகுவதாலேயே எல்லாவற்றுக்கும் முஷ்டியை உயர்த்த வேண்டியதில்லை என்ற முதிர்ச்சியும் இருக்க வேண்டும் தான். எதற்கு முஷ்டியைப் பயன்படுத்த வேண்டும், எதற்கு மூளையைப் பயன்படுத்தினாலேயே போதும் என்கிற பாகுபாட்டை நாம் புரிந்துகொண்டாலே போதும். மற்றபடி, பதின் பருவத்தில், எதிர்காலத்திற்கென நம்மைத் தயார் செய்வதில், மிக முக்கிய இடம் ஜிம்மிற்கு உண்டு. ஜிம், ஒரு அதி முக்கியமான புள்ளி என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.



Saturday, 5 July 2025

சூர்யா சேதுபதி

சமீபமாக, சூர்யா சேதுபதி சந்திக்கும் ட்ரால் பெரிதாக ஆச்சர்யமூட்டவில்லை.

சொல்லப்போனால், நம்மை யார் தான் சரியாக புரிந்து வைத்திருக்கிறார்கள்? நெருங்கிய சொந்தங்கள் என்று நாம் நினைப்பவர்கள் கூட, அந்தப்பக்கம் போனால், நம்மைப் பற்றி வேறு விதமாகத்தான் பேசுவார்கள். இல்லை என்று யாராவது ஒருவர் சொல்ல முடியுமா? அப்படிச் சொல்கிறாரென்றால், விவரம் தெரியாமல் சொல்கிறார் என்று தானே பொருள்? 

அதெல்லாம் நமக்குத் தெரியவராதவரைக்கும் தான் சொந்தங்களாக இருக்க முடியும். அடுத்தவர் மனக்குரல்கள் நமக்குக் கேட்டுவிட்டால், இங்கே நண்பன், உற்றார், உறவினர், சொந்தங்கள் என்று எந்த உறவும் எவருக்கும் இருக்காது.

மறதியும்,  டெலிபதி தெரியாமல் இருப்பதுவும் தான், நம்மை சக மனிதர்களுடன் நட்புறவாக வாழ வைக்கிறது என்றால் அது மிகையில்லை. 

இப்படிச் சொல்வதால், விஜய் சேதுபதியின் மகனுக்காக வரிந்து கட்டுகிறேன் என்று எண்ண வேண்டாம். அது நோக்கமில்லை. உண்மையிலேயே, நம்மை முழுமையாக, துல்லியமாகப் புரிந்து வைத்திருப்பவர் நாம் மட்டும் தான். அதில் மாற்றுக்கருத்தே இல்லை. நாம் என்ன நினைத்து ஒன்றைச் செய்தோம், அதை மற்றவர்கள் எப்படியெல்லாம் புரிந்துகொண்டார்கள் என்பதெல்லாம் நமக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.  ஆண் துணை இல்லாமல் இருக்கும் பெண் என்றால் வெகுஜனப் பார்வை என்ன? கருப்பாக இருப்பவன் மீதான மற்றவர்களின் அணுகுமுறை என்ன? எளியவன் மீது அதிகாரம் மிக்கவனுக்கு இருக்கும் பார்வை என்ன? துல்லியமான புரிதலின் அடிப்படையிலா இதெல்லாம் நடக்கிறது? அஜித்குமார், ம்குமார் போன்றவர்கள் யார்?

மற்றவர்களிடம் இருப்பதெல்லாம் அவரவர் பார்வையில் நாம் பயன்படக்கூடிய ஒரு கோணம் மட்டுமே. அந்தக் கோணத்தின் வழி மட்டுமே நம்மைப் புரிந்து வைத்திருப்பார்கள். அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

மைக் முன்னால் நடிக்கும் பல நடிகர்கள் இருக்கிறார்கள். மைக்கில் சொல்வதற்கெண்று ஒத்திகை பார்க்கப்பட்ட வரிகளை மனனம் செய்து ஒப்புவிப்பவர்கள் இருக்கிறார்கள். ஒருமுறை, ஷாருக்கானிடம் 'ஜோக்கர்கள் யார்?' என்று கேட்டபோது 'Voters' என்றார். அது நகைச்சுவைக்குச் சொல்லப்பட்ட பதில் அல்ல. ஒரு தயாரிப்புடனே மைக்குகளை அண்டுவார்கள். காமிரா முன்னால் நிற்பார்கள். சூர்யா அப்படி தயார் செய்தது போல் தோன்றவில்லை. அப்படித் தயார் செய்திருந்திருந்தால் இப்படி வாயில் பபுள்கம்முடன் வந்து மீடியாக்களுக்குக் கன்டன்ட் கொடுத்திருக்க மாட்டார் என்கிற அளவில் மட்டுமே எனக்குப் புரிகிறது. 

  

 



Thursday, 3 July 2025

Rebuild

 




வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்காது.

நம்மளைச் சுத்தி தினம் தினம் குற்றங்கள் நடந்துட்டு தான் இருக்கு. எல்லாத்தையும் நாம கேள்விப்பட்டுட்டு தான் இருக்கோம். அந்தக் குற்றங்கள் நமக்கு நடக்காத மாதிரி நம்மளை நாம தகவமைச்சுக்கிட்டு தான் இருக்கோம். நம்ம சுற்றத்துல, நம்மாளு, வேத்தாளு,வேண்டியவன், வேண்டாதவன்னு தரம் பிரிச்சு நமக்கு வேண்டியவங்களுக்கு மத்தியில ஒரு வாழ்க்கையை நாம அமைச்சுக்கிறோம்.

ஆனா, அது எல்லாத்தையும் மீறி சில சமயங்கள்ல, நாம யாரை நல்லவன்ன்னு நினைச்சோமோ, யாரை வேண்டியவன்னு நினைச்சோமோ, யாரை நம்மாளுன்னு நினைச்சோமோ அவுங்களால தான் நமக்கு பொல்லாப்பும் நடந்துடும். நம்மோட கற்பிதங்களுக்குள்லெல்லாம் அடங்காதது தான் விதி, வாழ்க்கை எல்லாம்.

எவ்வளவு தான் திட்டமிட்டு வாழ்க்கையைக் கொண்டு போனாலும், நடக்கக்கூடாதது நடக்கும் போது, அதுல விழ வேண்டி வந்துடலாம். அது யாருக்கு வேணும்னாலும் நடக்கலாம். 'எனக்கெல்லாம் நடக்காது'ந்னு நம்மள்ல யாராச்சும் நினைச்சா, அவுங்க இன்னும் 'விழல'ந்னு தான் அர்த்தம். இதுவரை விழலன்னா, இனிமேல் விழ அதிக வாய்ப்பிருக்குன்னு அர்த்தம்.

எல்லார் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு கட்டத்துல விழ வேண்டி இருக்கும். சின்ன வயசுல விழறதுல இருக்கிற சாதகம் என்னன்னா, எழுந்தா, அதுக்குமேல விழ வேண்டிய தேவை இல்லாத ஒரு நீண்ட நெடுங்காலம் கிடைக்கும். வயசான காலத்துல வீழ்ச்சியை சந்திக்கிறதுல இருக்கிற பிரச்சனை என்னன்னா, எழறதுக்கான தெம்பே இருக்காது. So, சின்ன வயசுல விழறது ஒரு வகையில நல்லது. Its better to fall at an young age.

நமக்கு தெரிய வேண்டியது எல்லாம், விழுந்தா எப்படி எழுறதுங்குறது தான். Build பண்றது ஒரு பெரிய விஷயம் தான். ஆனா,அதை விட பெரிய விஷயம் Rebuild பண்றது. 'Rebuild' பண்ண கத்துக்கோங்க. இந்த உலகம் Build பண்ண ஆயிரத்தெட்டு வித்தை கத்துத் தரும். அதுல, நம்மாளு, வேண்டியவங்கிறதெல்லாம் வித்தைகள். ஆனா, Rebuild? அதை நிச்சயமா இவங்க யாரும் கத்துத்தர மாட்டாங்க? ஏன்னா, Rebuild பண்ண வேண்டிய இடத்துக்கு உங்களைத் தள்றவங்களே இவுங்களாத்தான் இருப்பாங்க...



Saturday, 21 June 2025

The Silent Planet - Movie

 நம் போன்றே எவரேனும் எதையேனும் யோசித்திருந்தால் 'அட!' என்று பார்ப்போமல்லவா? அது போல, வெகு சமீபத்தில் பார்த்த அறிவியல் புனைவுத் திரைப்படம் 'The Silent Planet'. 

2024ம் வருடம் ஜூலை மாதம் ரிலீஸ் ஆகியிருக்கிறது.  நான் சொல்வது என்னவென்றால், நீங்கள் இந்தத் திரைப்படத்தை நேரம் கிடைத்தால் பாருங்கள். அப்படிப் பார்த்தவர்கள்,  சொல்வனம் இதழில் நவம்பர் 2024ல் வெளியான எனது 'நவீன சிறைச்சாலைத் தத்துவம்' சிறுகதையையும் வாசியுங்கள். 

சுட்டி இங்கே:

https://solvanam.com/2024/11/10/%e0%ae%a8%e0%ae%b5%e0%af%80%e0%ae%a9-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5/


முடிந்தால், இவ்விரண்டில் எது நன்றாக இருக்கிறது என்று கமெண்ட் இடுங்கள். என் ஒபினியன் ஒரு பக்கம் இருக்கட்டும். திரைப்படத்தைப் பார்க்கவும் எனது சிறுகதையை வாசிக்கவும் செய்தவர்களின் ஒபினியன் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். முடிந்தால் செய்யவும். நன்றி.